Thursday 7 November 2013

பழந்தமிழர் விளையாட்டுக்களில் ஒன்றுதான் சேவல் சண்டை. இதனை "சாவக்கட்டு" என்றும் அழைப்பர். இரு சேவல்களை ஒன்றுடன் ஒன்று சண்டையிடச் செய்வதே சேவல் சண்டை எனப்படும். சில சேவல் சண்டைகளில் சண்டையிடும் சேவலின் வலதுகாலில் ஏறத்தாழ மூன்று அங்குல நீளமுள்ள கத்தி கட்டிவிடப்படுவதும் உண்டு.

இந்த சேவல் சண்டைகள் பொதுவாக இரண்டுவகைப்படும். ஒன்று கத்தி கட்டப்பட்ட சேவல் சண்டை. மற்றையது கத்தி கட்டப்படாத சேவல் சண்டை இதனை "வெப்போர்" என்றும் அழைப்பர். சண்டையின் போது சோர்வடைந்து விழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்த சேவலாக அறிவிக்கப்படும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த சேவல் சண்டை தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பது மேலதிக தகவல்.

எல்லாம் சரிதான், மேலே சொன்ன விவரங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இந்நேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.

போகரும் கூட சேவல் சண்டையைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதுவும் சண்டையிடும் சேவல் வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தியைப் பற்றி சொல்லியிருக்கிறார். 

போகர் ஜாலவித்தை என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு.....

கொள்ளவே நத்தையென்ற சூரிதன்னை
கொண்டுவந்து ஒருமாதம் நீரில்போட்டு
விள்ளவே மாதமது சென்றெடுத்து
வெண்ணெய்போல் அறைத்துநல்ல சாவலுக்கு
உள்ளுக்குக் கொடுத்துசண்டை விட்டுப்பாரு
ஒருக்காலும் எதிரியிதை வெல்லலாகா
தல்லவே கத்திகட்டி விட்டபோதும்
அறுபடா தோல்வியென்ப தருமைதானே.

போகர்

நத்தை சூரி மூலிகையை எடுத்துவந்து ஒருமாதம் நீரில் போட்டு வைக்க வேண்டுமாம். ஒருமாதம் நீரில் ஊறிய நத்தை சூரியை எடுத்து வெண்ணெய் போன்று அரைத்துக் கொள்ள வேண்டுமாம்.

அதனை சேவலுக்கு உண்ணக் கொடுத்துவிட்டு, சண்டையிட விட்டு விட வேண்டுமாம். அப்போது எதிர் சேவலால் இந்த சேவலை வெல்ல முடியாது என்கிறார். அவர் மேலும், கத்தி கட்டி விடப்பட்ட சேவலுடன் சண்டையிட்டாலும் இந்த சேவல் வெட்டுப்படாது என்றும் சொல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே.!